புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை!
 விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 8 ஆம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. 

இதுகுறித்து விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 8 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு புத்தக திருவிழா அக்டோபர் 16 முதல் 20 வரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  

ஐந்து நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.சி.நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ப்ரிங்டல் பப்ளிக் பள்ளி, சாணக்யா இன்டர்நேஷனல் ஸ்கூல், சிந்தாமணி வித்யாலயா பள்ளி, கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட  ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.  

 

இக்கண்காட்சியில் முன்னணி பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.  கண்காட்சியில் புத்தகங்களுக்கு 10 % சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டது. புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் மொத்தம் 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. 20000 இக்கும் மேற்பட்டோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.


ஓவ்வொரு நாள் மாலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், இயற்கை சித்த மருத்துவர் கு.சிவராமன், எழுத்தாளர்கள் பவாசெல்லத்துரை, ஈரோடு கதிர், திரைப்பட இயக்குனர் வசந்த் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள். மேலும் தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்,  இயற்கை விவசாயிகள், இளம் தொழில் அதிபர்கள், சமூகசேவர்கள் ஆகியோர் புத்தக திருவிழாவில் கெளரவிக்கப்பட்டார்கள்.