மும்பை தீவிரவாத தாக்குதல்; 11 ஆண்டுகள் கடந்தாலும் நெஞ்சில் நீங்காத காயம்!

26/11 எனப்படும் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் பின்னணியை சற்றே திரும்பி பார்ப்போம்


கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை மாநகர் வழக்கம் போல் தான் விடிந்தது. ஆனால் அன்றைய தினம் மிகக் கொடூரமாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.


 

லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் 10 பேர் மீனவர்களை கொன்று விட்டு அவர்களின் படகுகள் மூலம் மும்பை நகருக்குள் நுழைந்தனர். இவர்கள் இரு குழுக்களாக பிரிந்து தங்களை தாக்குதலை தொடங்கினர்.

நவம்பர் 26, 2008 அன்று மாலை மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் முதல் தாக்குதல் நடைபெற்றது. அப்போது ரயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது திடீரென துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் சிதறி ஓடினர்.

தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 58 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலை தீவிரவாதி அஜ்மல் கசாப் வழிநடத்தினார்.

இதற்கடுத்த சில நிமிடங்களில் மும்பை நாரிமன் இல்லம், லெபர்ட் கஃபோவில் தாக்குதல் நடைபெற்றன. இதில் வெளிநாட்டினர் 4 பேர் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மும்பையின் பிரபல தாஜ் ஓட்டல், ஓரியண்ட் ஓட்டலில் தாக்குதல் நடைபெற்றது.

அங்கு தங்கியிருந்த வெளிநாட்டினர் உட்பட 300க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டனர். இவர்களை மீட்க 3 நாட்களாக பாதுகாப்பு படையினர் போராடினர்.