மொபைல் சேவைக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனால் பாதிப்பு ஒன்றும் இல்லை என்று மத்திய அரசு ஆறுதல் கூறியுள்ளது.
மொபைல் போன்கள் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இந்தியாவில் மொபைல் போன்களின் ஆதிக்கம் உள்ளது. தகவல் தொடர்புக்கு இன்றியமையாதவையாக உள்ள மொபைல் போன்களும், அதற்கு ஆதாரமாக இருக்கும் இணைய இணைப்பும் மலிவான விலையில் மக்களுக்குக் கிடைக்க வேண்டியது அவசியமாகும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டில் இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்தபோது டேட்டா, அழைப்புக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்று அதிரடியாகக் களமிறங்கியது.
அதனுடன் போட்டி போடும் வகையில் ஏர்டெல், ஐடியா, வோடஃபோன், ஏர்செல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் தங்களது மொபைல் சேவைக் கட்டணங்களைக் குறைக்கத் தொடங்கின. ஜியோவுடன் போட்டி போட முடியாமல் இழப்பைச் சந்தித்த சில நிறுவனங்கள் சந்தையை விட்டே வெளியேறின.